Monday, May 30, 2016

ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் சேர மீண்டும் அதிகரிக்கும் ஆர்வம்

கடந்த இரு கல்வியாண்டுகளை விட, ஆசிரியர் பட்டயப்பயிற்சி படிப்பில் சேர, மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. பயிற்சி முடிப்பவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்பதால், மாணவர்கள் இப்படிப்புக்கு ஆர்வம் காட்டி விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின், காலிப்பணியிடங்களுக்கு, ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
மாவட்ட அளவிலான சீனியாரிட்டி மூலம் கடந்த, 2004ம் ஆண்டு வரை, பட்டயப்படிப்பு படித்தவர்கள், அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தனர். எனவே, இப்படிப்பு படிக்க, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவியது. அரசுக்கு நிகராக தனியார் கல்வி நிறுவனங்களும் இப்படிப்பிற்காக புதிதாக மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டன.
இந்நிலையில், மாநில அளவிலான சீனியாரிட்டி, ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிகளுக்கான காலிப்பணியிடங்களை அரசு நிரப்ப துவங்கியதும், இப்படிப்புக்கான ’மவுசு’ குறைந்தது. பட்டயப்பயிற்சி படிப்பை தேர்வு செய்த மாணவர்கள் வேலையின்றி தற்காலிக ஆசிரியர்களாகவும், வெவ்வேறு பணிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், கடந்த நான்காண்டுகளாகவே ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை; மாணவர் எண்ணிக்கை சரிவால், சில தனியார் பயிற்சி நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்தாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு ’டெட்’ தேர்வு எளிமையாக இருந்த காரணத்தால் நடப்பாண்டில், மாணவர்களின் விருப்பம் மீண்டும் இப்படிப்பின் பக்கம் திரும்பியுள்ளது.
நடப்பாண்டு தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப்பயிற்சி படிப்புக்கான சேர்க்கை, கடந்த 20 ம்தேதி முதல் துவங்கியது. விண்ணப்பங்கள் திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், கோவை மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருப்பூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் வழங்கப்படுகின்றன.
கோவையில் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மட்டுமே இருப்பதால், பொதுவான மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் துவக்கப்பட்டது. நடப்பாண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதில், கோவையில் மொத்தமாக, 90, உடுமலை திருமூர்த்திநகரில், 100 இடங்களும் உள்ளன. விண்ணப்ப வினியோகம் துவங்கிய நாள் முதல் 80 சதவீதத்துக்கும் மேல் வினியோகிக்கப்பட்டுள்ளது.
’ஜூன் 10 வரை விண்ணப்பம்’
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் கூறுகையில்,” இதுவரை, கோவையில் நூறு மற்றும் திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 50 விண்ணப்பங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன. நாள்தோறும், பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவுடன் ’டெட்’ தேர்வு எழுதினால் எளிமையாக இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். இதனால் நடப்பாண்டில் விண்ணப்ப வினியோகம் அதிகமாகவே உள்ளது. கலந்தாய்வு முறையில் மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஜூன் 10 ம் தேதி வரை வழங்கப்படுகிறது,” என்றார்.

No comments:

Post a Comment